11/8/14

இறைவனின் சித்தத்தில் ஜெபித்தல் இறைவனின் சித்தத்தை அறிய ஜெபித்தல் மனதிற்கு அமைதி தரும் அரும் மருந்தாகும்.



இறைவனின் சித்தத்தில் ஜெபித்தல் இறைவனின் சித்தத்தை அறிய ஜெபித்தல் மனதிற்கு அமைதி தரும் அரும் மருந்தாகும். ஆண்டவரே உம் சித்தம் நிறைவேரட்டும் என்று ஜெபித்தல் நன்மை  பயக்கும் சரணாகதி நிலையாகும். இந்த ஜெபம் இறை சித்தத்தில் நம் சித்தத்தை இணைக்கும் ஜெபம் ஆகும் . இந்த ஜெபம் குழந்தை உள்ளம் கொண்ட கள்ளமில்லா ஜெபம் ஆகும். இந்த ஜெபம் நம் புலன்களுக்கு அப்பாற்பட்ட இறை பிரசன்னத்தை வரவேற்கும் ஜெபம் ஆகும். இந்த ஜெபம் ஓர் அரிய வரம் ஆகும். ஏனெனில் இறைவனின் சித்தத்தை ஏற்கும் மனப்பான்மை மனித சித்தத்திற்கு அப்பாற்பட்டது. இன்பத்திலும் துன்பத்திலும் இறை சித்தத்தை நாடும் மனம் பண்பட்ட மனம் ஆகும்.

இத்தகைய ஜெபத்திற்கு முன்மாதிரிகை ஆண்டவராகிய எசுக்கிரிஸ்துவாகும். ஆண்டவர் தன் மானிட வாழ்வில் இறை பிரசன்னத்தில் வாழ்ந்தார் மற்றும் ஜெபித்தார் . குறிப்பாக கெத்சமனியில் இறைவனின் சித்ததிர்காக  ஜெபித்தார், அவர் தம் சீடர்களுக்கு சொல்லிக்  கொடுத்த பரலோக  மந்திரத்தில்  இறைவனின்  சித்தத்திற்காக  ஜெபிக்க கற்றுக்கொடுத்தார்.  மனிதனும் இறைவனுமான    ஆண்டவராகிய  ஏசுவுக்கே இறைவனின் சித்தத்தில் ஜெபிப்பது அவசியபட்டால் , மனிதராகிய  நமக்கு எவ்வளவு  அதிகம் இறைசித்தம் அவசியமான அருள் வரம் ஆகும். எங்கள் அப்பா எப்போதும்  இறைவனின் சித்தம் நடக்கட்டும் என்று சொல்வார். அஃது ஓர் அரிய வரம் ஆகும்.



ஜெபம் மனிதனின் உள்ளத்தில் இருந்து எழுந்தாலும் ஜெபத்தை தூண்டுபவர் நம்மில்  வாழும் பரிசுத்த ஆவியானவர் ஆகும் . ஜெபம் வாய்மொழி ஜெபம் , மனதின் வழி வெளிப்படும்  தியான ஜெபம் , மற்றும் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும்  மனதை இறைவன்பால் உயர்த்தும் இறைவனோடு ஒன்றித்து வாழும் வாழ்வின் ஜெபம் என பலவகையாக அமைந்தாலும் , அவை  யாவற்றிலும் இறைவனின் தூண்டுதலும்  மனிதனின் ஒத்துழைப்பும் ஒருமித்து அமைந்துள்ளது. இதனால் எல்லா ஜெபத்திலும் இறைவனின் சித்தம் அமைத்துள்ளது . இன்னும் ஜெபிப்பதே இறைவனின் சித்தத்தை அறியும் முதல் படியாகும்.

இறைவனின் சித்தத்தில் , இறைவனின்  சித்தத்திற்காக ஜெபிப்பது, ஒருவர்  தம்  வாழ்வின்  சூழ்நிலைகளில் தம்  மனதையும் , உள்ளத்தையும் , உடலையும் , சிந்தனைகளையும் , செயல்பாடுகளையும், தனி மனித ஆளுகையையும்,  தனி மனித திட்டங்களையும் , தனி  மனித வல்லமையும் , தனி  மனித சுய சித்தத்தையும் இறைவனின் பாதத்தில் அர்ப்பணித்து, அமைதியாக  வாழ்வை எதிர்கொள்ளும் அற்புத நிலையாகும் . இஃது  ஒரு அரிய வரம் ஆகும் . இறைவனின் சித்தத்திற்காக ஜெபிக்கும் போது,  ஒருவர்  தம் கடமைகளை செய்து பலனை எதிர்பார்க்காத ஓர் அர்ப்பண வாழ்வை மேற்கொள்ளுகிறார். இஃது  ஓர் முதிர்ந்த பக்தியின்  பயணம் ஆகும்.

இறைவனின் சித்தத்தில் , இறைவனின்  சித்தத்திற்காக ஜெபிப்பது, ஓர்  வீரமான புண்ணியம் ஆகும் . இத்தகைய  ஜெபத்தில் ஒருவர் இருக்கும் போது  மனதில் அமைதி ஏற்படும் . இந்த அமைதி உலகம் தர முடியாத அமைதியாகும் . ஏற்மாறான  சூழ்நிலைகளிலும் ஒருவர் இந்த மன அமைதி ஓர்  முக்தியின்  நிலையை  சுவைக்கும் அமுதம்  ஆகும் . இந்த ஜெபத்தில்  ஒருவரின்  ஆன்மா  உலக காரியங்களுக்கு அப்பால் விடுதலை அடைகின்றது . இதனால் உலக சூழல்களில் இறைபிரசனத்தில்  அடைக்கலமடைகிறது. இதனால்  உலக தீமைகளிலிருந்து  விடுதலை பெறுகின்றது .

இறைவனின் சித்தத்தில் இறைவனின்  சித்தத்திற்காக ஜெபிப்பது ஓர் காத்திருப்பு  நிலையாகும் . அன்மா இறைவன்பால் ஈர்க்கப்பட்டு உடல் உள்ளம்  ஒன்றுபட்டு  வாழும் ஓர் தியான வாழ்வாகும் . இதனால் சுயம் மறைந்து இறைவன்  உள்ளத்தில் வாழ வழி பிறக்கிறது. இத்தகைய  நிலையில் மனிதன்  இறைவனின்  அற்புதங்களையும் , வெளிப்பாடுகளையும்  இவ்வுலகில்  தம்  வாழ்வில் கண்டு,  பக்தி  விசுவாச வைராக்கியம்  தம் வாழ்வில் வளர  காணும்  பாக்கியம் பெறுகின்றான். இந்த  தவ  நிலையான ஜெப  நிலையில் நிலைத்திருக்கும்  மனிதனின் ஆன்மா இன்பத்திலும் துன்பத்திலும் இறைவனோடு  வாழும் திடம் பெறுகின்றது . காணும்  இடமெல்லாம் இறை  பிரசன்னத்தை  உணரும் நிலையை  ஆன்மா அடைகின்றது. இதனால் அற்புதங்கள் அதிசயங்கள்  இறைவனின்  சித்தத்திற்காக ஜெபிக்கும் ஜெபத்தில்  வாய்க்கின்றது. மேலும் இறைவனின்  சித்தத்திற்காக ஜெபிப்பது  ஜெபத்தின்  பலன்  எதுவானாலும்   ஏற்றுக்கொள்ளும்  குழந்தை மனதை அளிக்கும் ஓர்
அற்புத ஜெபம் ஆகும். 

No comments:

Post a Comment