6/22/15

வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணி உரையாசிரியர் பேராசிரியர் வி.மரிய அந்தோணி: நாட்டுப் படலம்

வீரமாமுனிவர்
எழுதிய
தேம்பாவணி
உரையாசிரியர்
பேராசிரியர் வி.மரிய அந்தோணி

முதலாவது

நாட்டுப் படலம்

     தேம்பாவணியின் 3615 பாடல்களும் 36 படலங்களாக உட்பிரிவு
பெற்றுள்ளன. இவற்றை ஒவ்வொன்றும் பன்னிரு படலங்கள் கொண்ட
மூன்று பாகங்களாக முதற்கண் வெளியிட்டோர் ஒவ்வொன்றும் ஒவ்வொரு
காண்டமென்று எண்ணிக்கைப் பெயரிட்டுள்ளனர். முடி சூட்டுப் படலம்,
131-ஆம் பாடலிலும், பாவுரை பதிகத்தும் புறவுரை ஆசிரியத்தும் படலத்
தொகையும் பாடல் தொகையும் குறிக்கப்பட்டுள்ளன; காண்டம் பற்றிய
விவரமே இல்லை. நூலின் தன்னிறைவு கொண்ட பெரும் பிரிவே
காண்டம் எனக் கொள்ளத்தக்கது. அதனோடும் இக்காண்டப்பிரிவு
பொருந்தவில்லை. எனவே, தேம்பாவணிக்குக் காண்டப் பிரிவு
இல்லையென்று கொள்க.
     படலம் என்பது காப்பிய உட்பிரிவாய்த் தன்னிறைவு கொண்டு,
அடுத்து வரும் படலத்தோடு கதைத் தொடர்பு கொண்டு நிற்பது.
     இப்படலம் வளன் பிறந்த சூதேய நாட்டின் இயற்கை வளத்தை
இணைத்துக் கூறும் பகுதி.

                       மழை வளம்
     - மா, கூவிளம், -விளம், -விளம், -மா
  
                         1
புள்ளு லாம்விசும் பிடைதொறும் பொரும்படை பொருவ
வெள்ளு லாமழை வெண்கொடி யுருக்கொடு விளங்கித்
தெள்ளு லாந்திரை திளைப்பவுண் டெழுந்துயர் பரந்து
வள்ளு லாங்கரு மதகரி இனமெனத் தோன்ற.
புள் உலாம் விசும்பு இடை தொறும் பொரும் படை பொருவ
வெள் உலாம் மழை வெண் கொடி உருக் கொடு விளங்கி,
தெள் உலாம் திரை திளைப்ப உண்டு, எழுந்து உயர் பரந்து
வள் உலாம் கரு மத கரி இனம் எனத் தோன்ற.
     பறவைகள் பறந்து உலாவும் வானத்தில் வெண்ணிறமாக இடந்தோறும்
உலாவும் மேகங்கள், போருக்கு அணிவகுத்த படை போலவும்,
வெண்ணிறத்துணிக்கொடியின் உருவத்தைக் கொண்டும் விளங்கின. பின்
அவை அசைந்து உலாவும் தெளிந்த கடல் நீரை மிகுதியாகக் குடித்து,
எழுந்து உயர்வானத்தில் பரந்து, வலிமையோடு காட்டில் உலாவும் கரிய
மத யானையின் கூட்டம் போல் தோன்றின.

http://www.tamilvu.org/library/l4310/html/l4310fir.htm

1 comment: