திருத்தந்தையின் புதன் மறைபோதகம்
நவ.21,2012. கடந்த இரண்டு நாள்களாக மழையைப் பொழிந்து கொண்டிருந்த கார்மேகக் கூட்டங்கள் இப்புதன் காலை கலைந்து கதிரவனின் வெள்ளிக் கதிர்களுக்கு இடம் கொடுத்திருந்தன. குளிர்காலமும் தனது நிலையை வெளிப்படுத்திக் கொண்டிருக்க, திருத்தந்தையின் இப்புதன் பொது மறைபோதகம் பாப்பிறை 6ம் பவுல் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த அரங்கத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பல நாடுகளின் திருப்பயணிகளுக்கு, இறைநம்பிக்கையை அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொள்வது குறித்து விளக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அன்புச் சகோதர சகோதரிகளே, நம்பிக்கை ஆண்டில் நாம் கேட்டுவரும் புதன் மறைபோதகத்தின் தொடர்ச்சியாக, கடவுளின் உண்மையின் மகிமையோடு சந்திப்பதாக, கடவுள் மீதான நம்பிக்கையை அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொள்வது குறித்து இன்று நோக்குவோம் என ஆங்கிலத்தில் தனது சிறிய போதகத்தைத் தொடங்கினார்.
நம்பிக்கை மூலமாக கடவுள் பற்றியும் நம்மைப் பற்றியும் நாம் உண்மையான அறிவைப் பெறுகிறோம். வாழ்வின் நிறைவையும், மகிழ்ச்சியையும் மறுவுலகில் பெறுவதற்காகக் காத்திருக்கும் நாம், இவ்வுலகில் விவேகத்துடன் வாழ்வதற்கும் நம்பிக்கை வழியாகக் கற்றுக் கொள்கிறோம். கடவுள் பற்றிய உண்மையை மனித மனத்திற்குத் திறந்து வைப்பதில் நம்பிக்கையும் அறிவும் ஒன்று சேர்ந்து செயல்படுகின்றன. உண்மையைத் தேடும் அறிவானது, கடவுளின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையோடு இடம்பெறும் சந்திப்பில் உள்தூண்டுதலையும், வழிகாட்டுதலையும், நிறைவையும் கண்டு கொள்கின்றது. அதேநேரம், நம்பிக்கை, தனது இயல்பிலே கொண்டிருக்கும் புரிந்துகொள்ளும் வழிகளைத் தேடுகின்றது. மனிதரின் அறநெறி வாழ்வின் முன்னேற்றத்துக்கும், அவர் படைப்பை விவேகத்தோடு கையாள்வதற்குமான சேவையில் நம்பிக்கையும் அறிவியலும் கைகோர்த்துச் செல்கின்றன. இறைமகன் இயேசு கிறிஸ்துவில் நமது மீட்பின் நற்செய்தியானது உண்மையான மனிதத்தை நமக்கு வழங்குகிறது. மனிதர் மற்றும் அகிலத்தின் பேருண்மையைப் புரிந்துகொள்வதற்கு ஓர் இலக்கணத்தையும் இது நமக்கு வகுக்கின்றது. நமது மனித மாண்பு மற்றும் அழைப்பின் மகிமையை வெளிப்படுத்தும் கடவுளின் உண்மையின் ஒளிக்கு இந்த நம்பிக்கை ஆண்டில் நாம் நமது மனங்களைத் திறப்போமாக
இவ்வாறு இப்புதன் மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், “இன்றைய உலகில் நீதியை ஊக்குவிப்பதில் கத்தோலிக்க-முஸ்லீம் ஒத்துழைப்பு” என்ற தலைப்பிலானக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களை வாழ்த்தினார். இவ்வாண்டில் பொன்விழாவைச் சிறப்பிக்கும் CAFOD பிறரன்பு நிறுவனத்துக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் திருஅவையின் சார்பாகத் தனது நன்றி கலந்த வாழ்த்தைத் தெரிவித்தார். மேலும், நவம்பர் 21, இப்புதனன்று தூய கன்னிமரியை காணிக்கையாக அர்ப்பணித்த விழாவன்று அடைபட்ட துறவு சபையினர் நாளும் சிறப்பிக்கப்பட்டது. எனவே அத்துறவியரையும் வாழ்த்தினார். இறுதியாக, இம்மறைபோதகத்தில் கலந்து கொண்ட இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட பல நாடுகளின் திருப்பயணிகளை வாழ்த்தித் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை
No comments:
Post a Comment