11/25/12

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம் 


அக்.24,2012. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டு நிறைவு, கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு வெளியிடப்பட்டதன் 20ம் ஆண்டு நிறைவு ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளை முன்னிட்டு நம்பிக்கை ஆண்டை அறிவித்து அதனை இம்மாதம் 11ம் தேதி அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இந்த நம்பிக்கை ஆண்டில் இடம்பெறும் தனது வழக்கமான புதன் பொதுமறைபோதகங்களில் இந்த நம்பிக்கை ஆண்டு குறித்த சிந்தனைகளை வழங்கவிருப்பதாகக் கடந்த புதன் பொதுமறைபோதகத்தில் அறிவித்தார் திருத்தந்தை. இந்த நம்பிக்கை ஆண்டில் இடம்பெறும் இரண்டாவது பொது மறைபோதகமான இப்புதனன்று, நம்பிக்கை ஆண்டின் நமது மறைக்கல்வித் தொடரின் தொடர்ச்சியாக நம்பிக்கையின் இயல்பு குறித்து இன்று பார்ப்போம் என தனது மறைபோதகத்தைத் தொடங்கினார் திருத்தந்தை. அராபியம் உட்பட பல மொழிகளில் பொது மறைபோதகத்தை வழங்கிவரும் திருத்தந்தை, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான ஆங்கிலம் பேசும் பயணிகளுக்கென இவ்வாறு ஆரம்பித்தார்.
RealAudioMP3 நம்பிக்கை என்பது, கடவுள் பற்றிய அறிவை மட்டும் வெறுமனே கொண்டிருப்பதற்கும் மேலாக, அவரை வாழ்வில் சந்திப்பதாகும். கிறிஸ்துவின் வாழ்வு, மரணம், உயிர்ப்பு ஆகியவற்றில் தம்மையே வெளிப்படுத்திய கடவுளை நம்பிக்கை வழியாக அறிந்து அன்பு கூருகிறோம். அவ்வாறு செய்யும்போது, மனிதர்களாகிய நாம் வாழ்வதன் ஆழமான அர்த்தத்தையும் உண்மையையும் அவர் நமக்கு வெளிப்படுத்துகிறார். இந்த நம் காலங்களின் ஆன்மீகக் குழப்பங்களுக்கு மத்தியில் உறுதியான பற்றுறுதியையும் வழியையும் நம்பிக்கை நமக்கு அளிக்கின்றது. அனைத்துக்கும் மேலாக, நம்பிக்கை ஒரு விண்ணகக் கொடை. இறைவார்த்தைக்கு நமது இதயங்களையும் மனங்களையும் திறக்கவும், திருமுழுக்கு வழியாக திருஅவைக்குள் அவரது இறைவாழ்வில் பங்குதாரர்கள் ஆகவும் நம்பிக்கை நமக்கு உதவுகிறது. எனினும், நம்பிக்கை, நமது அறிவையும் சுதந்திரத்தையும் சார்ந்து இருக்கும் ஓர் ஆழமான மனிதச் செயலாகவும் இருக்கின்றது. கடவுளது அழைப்பையும் அவரது கொடையையும் நாம் வரவேற்கும்போது நமது வாழ்வும், நம்மைச் சுற்றியுள்ள உலகமும் மாற்றம் அடைகின்றன. நமது நம்பிக்கையை நாம் முழுமையாக வாழவும், நம்பிக்கை உறுதியளிக்கும் நித்திய வாழ்வுக்கு மற்றவர்கள், தங்களின் இதயங்களைத் திறந்து வைத்து, இறைவார்த்தையைக் கேட்டு அதனை ஏற்கவும் இந்த நம்பிக்கை ஆண்டு உதவுவதாக.
RealAudioMP3இவ்வாறு தனது புதன் பொதுமறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, 16ம் பெனடிக்ட், ஜப்பான், பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, கானடா, பிரிட்டன், டென்மார்க், நார்வே, நைஜீரியா, அமெரிக்கா போன்ற நாடுகள் உட்பட பல நாடுகளிலிருந்து வந்திருந்த பயணிகளை வாழ்த்தி தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

No comments:

Post a Comment