தேவமாதாவை நோக்கி அனுதினம் வேண்டிக்கொள்ளும் செபம்தேவதூதர்களுடைய இராக்கினியே, மனிதர்களுடைய சரணமே, சர்வ லோகத்துக்கும் நாயகியே, நாங்கள் எல்லாரும் உம்முடைய பிள்ளைகளாய் இருக்கிறோம். எப்படியாகிலும் எங்களை இரட்சிக்கவேணும் என்று தேவரீரை மன்றாடுகிறோம். தாயாரே, மாதாவே, ஆண்டவளே, உம்மை நம்பினோம், எங்களைக் கைவிடாதேயும். விசேஷமாய் நாங்கள் சாகும்போது பிசாசுகளுடைய தந்திரங்களையெல்லாம் தள்ளிப்போட்டு உம்முடைய திருக்குமாரன் இயேசுநாதரிடம் நாங்கள் வந்து சேருமட்டும் தேவரீர் துணையாயிரும். இது நிமித்தமாக உம்முடைய திருப்பாதத்தில் விழுந்து உம்முடைய ஆசீரைக் கேட்கிறோம். இதை அடியோர்களுக்கு இரக்கத்தோடே கட்டளை பண்ணியருளும் தாயாரே, மாதாவே, ஆண்டவளே.
ஆமென்.
நற்படிப்புக்கு பாதுகாவலாகிய தேவதாய்க்கு செபம்உலகத்தின் நித்திய ஒளியும் எங்கள் மீட்பருமாகிய இயேசுநாதரைப் பெற்றெடுத்த புனித கன்னிகையே. அறிவீனமும் அந்தகாரமும் நிறைந்த மனதில் உமது பரிசுத்த மன்றாட்டினால் அறிவிலும் பக்தியிலும் வியப்புக்குரிய வளர்ச்சியை அநேக முறை கொடுத்தருளிய தேவஞானத்தின் தாயே, அடியேன் தேவரீரை என்னை ஆதரிப்பவளாகவும் என் படிப்புக்குப் பாதுகாவலாகவும் தெரிந்துகொள்கிறேன்.
ஓ பேறு பெற்ற ஆண்டவளே, நற்படிப்புகளுக்குப் பாதுகாவலே, உமது மன்றாட்டுகளைக் கேட்டு, தூய திரு ஆவியார் எனக்கு நிரம்ப வெளிச்சத்தையும் பலத்தையும் விவேகத்தையும் தாழ்ச்சியையும் தந்தருள்வாராக. எனக்கு நேர்மையான மனத்தையும், போதுமான புத்தி, ஞாபகம் வல்லமைகளையும் அளித்து முக்கியமாய் நான் அனைத்திலும் தேவ ஞானத்தின் திருவுளப்படி நடப்பதற்கு வேண்டிய மன இருதயக் கீழ்ப்படிதலையும் கொடுத்தருள்வாராக.
என் நல்ல தாயே, ஆங்காரம், தற்பெருமை, வீண் விநோதப்பிரியம், யோசனையற்றதனம், இவைகளினின்று என்னைக் காப்பாற்றும். என் விசுவாசத்தையாவது ஆத்தும சமாதானத்தையாவது குறைக்கக்கூடிய எந்தக் காரியத்தினின்றும் என்னைப் பாதுகாத்தருளும்.
ஓ மரியாயே, நான் உமது பாதுகாவலின் உதவியால் அன்னையும் ஆசிரியையுமாகிய பரிசுத்த திருச்சபையின் போதனைக்கும் நடத்துதலுக்கும் எப்போதும் கீழ்ப்படிந்து சத்திய நெறியிலும் புண்ணிய வழியிலும் தவறாமல் தைரியத்தோடும் விடா முயற்சியோடும் நடந்து கடைசியாய் உமது திருமைந்தனும் எங்கள் ஆண்டவருமான இயேசுக் கிறிஸ்துவின் விண்ணுலக அரசை அடைந்து மூவொரு கடவுளின் வாழ்வில் பேரின்பம் கொள்ளக் கிருபை செய்தருளும்.
ஆமென்.
Long form of Evening Prayer...விரிவான மாலை வழிபாடு.பரிசுத்த ஆவியை நோக்கி
தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீ தனுப்பிடுவீர்.
எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
இருதய ஒளியே வந்தருள்வீர்.
உன்னத ஆறுத லானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தன்மையும் தருபவரே,
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர்நிழலே,
அழுகையில் ஆறுத லானவரே,,
உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப் போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.
மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வரட்சி யுற்றதை நனைத்திடுவீர்.
காயப் பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்கா திருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப் போனதை ஆண்டருள்வீர்.
இறைவா, உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.
புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்.
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்.
அழிவிலா இன்பம் அருள்வீரே.
ஆமென்.
நன்றியிருந்த தோத்திரம்
சர்வேஸ்வரா சுவாமி, என்னை ஒன்றுமில்லாதிருக்கையிலே ஒரு மனிதனாக உண்டாக்கினீரே - சுவாமி உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது.
நான் செய்த பாவங்களினாலே நரகத்திற்குப் போகக் கடனுண்டாயிற்றே, அந்தக் கடனை என்னால் உத்தரிக்க இயலாதென்று தேவரீர் மனிதனாகப் பிறந்து பாடுபட்டு உத்தரித்தீரே - சுவாமி உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது.
அந்தப் புண்ணிய பலன்களையெல்லாம் ஞானஸ்நான முகாந்தரமாக எனக்குத் தந்தருளினீரே - சுவாமி உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது.
நான் ஞானஸ்நானம் பெற்ற பிற்பாடு அநேக முறை பாவங்களைச் செய்தேனே, அந்தப் பாவங்களையெல்லாம் பாவசங்கீர்த்தன முகாந்தரமாகப் பொறுத்து என்னை நரகத்திலே தள்ளாமல் மோட்சத்திற்குப் போகிற வழியிலே நிறுத்திக் கொண்டிருக்கிறீரே - சுவாமி உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது.
நீர் இன்றெனக்கு எண்ணிறந்த உபகாரங்களையெல்லாம் செய்ததுமல்லாமல், எனக்கு நேரிடவிருந்த அநேக தீமைகளையும் விலக்கினீரே - சுவாமி உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது.
நான் இன்று செய்த பாவங்களெல்லாம் என் நினைவிற்கு வரவும், அவைகளுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும் உம்முடைய உதவியை அளித்தருளும் சுவாமி.
மேலான உத்தம மனஸ்தாப மந்திரம்
என் இறைவா, என் பாவங்களுக்கெல்லாம் நான் வருந்துகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். எல்லாவற்றையும் விட என் பாவங்களை வெறுக்கிறேன். ஏனெனில் அவை என் அன்புக்குரிய இயேசுவைச் சிலுவையில் அறைந்தன. எல்லையற்ற உமது அன்புள்ளத்தை வருத்தின. உமது திருவருள் உதவியால் இனிப் பாவம் செய்வதில்லையென்றும், பாவத்திற்குரிய வாய்ப்புக்களையெல்லாம் உறுதியாக நீக்குவேன் என்றும் முடிவு செய்கிறேன்.
ஆமென்.
தூய கன்னிமரியின் மன்றாட்டு மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
ஆண்டவரே இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும்.
விண்ணகத்திலிருக்கிற பிதாவாகிய இறைவா...எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா...எங்கள் மேல் இரக்கமாயிரும்.
பரிசுத்த ஆவியாகிய இறைவா...எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தூய திரித்துவமாயிருக்கும் ஒரே இறைவா...எங்கள் மேல் இரக்கமாயிரும்.
புனித மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இறைவனுடைய புனித மாதாவே,
கன்னியர்களில் உத்தம புனித கன்னிகையே,
கிறிஸ்துவினுடைய மாதாவே,
தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே,
மகா பரிசுத்த மாதாவே,
அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே,
பழுதற்ற கன்னியாயிருக்கிற மாதாவே,
கன்னித்தூய்மை கெடாத மாதாவே,
மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கிற மாதாவே,
ஆச்சரியத்துக்குரிய மாதாவே,
நல்ல ஆலோசனை மாதாவே,
சிருஷ்டிகருடைய மாதாவே,
இரட்சகருடைய மாதாவே,
மகா புத்தியுடைத்தான கன்னிகையே,
மகா வணக்கத்திற்குரிய கன்னிகையே,
பிரகாசமாய் துதிக்கப்பட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே,
சத்தியுடையவளாயிருக்கிற கன்னிகையே,
தயையுள்ள கன்னிகையே,
விசுவாசியாயிருக்கிற கன்னிகையே,
தருமத்தினுடைய கண்ணாடியே,
ஞானத்திற்கு இருப்பிடமே,
எங்கள் மகிழ்ச்சியின் காரணமே,
ஞானப் பாத்திரமே,
மகிமைக்குரிய பாத்திரமே,
அத்தியந்த பத்தியுடைத்தான பாத்திரமே,
மறைபொருளைக் கொண்ட ரோஜா மலரே,
தாவீது ராஜாவுடைய உப்பரிகையே,
தந்தமயமாயிருக்கிற உப்பரிகையே,
சொர்ணமயமாயிருக்கிற உப்பரிகையே,
வாக்குத்தத்தத்தின் பெட்டியே,
பரலோகத்தினுடைய வாசலே,
விடியற்காலத்தின் நட்சத்திரமே,
வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே,
பாவிகளுக்கு அடைக்கலமே,
கஷ்டப்படுகிறவர்களுக்கு தேற்றரவே,
கிறிஸ்தவர்களுடைய சகாயமே,
சம்மனசுக்களுடைய இராக்கினியே,
பிதாப்பிதாக்களுடைய இராக்கினியே,
இறைவாக்கினர்களுடைய இராக்கினியே,
அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே,
மறைசாட்சிகளுடைய இராக்கினியே,
துதியர்களுடைய இராக்கினியே,
கன்னியர்களுடைய இராக்கினியே,
அனைத்துப் புனிதர்களுடைய இராக்கினியே,
ஜென்மப் பாவின்றி உற்பவித்த இராக்கினியே,
பரலோகத்திற்கு ஆரோபணமான இராக்கினியே,
திருச்செபமாலையின் இராக்கினியே,
சமாதானத்தின் இராக்கினியே,
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே - எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே - எங்கள்
மேல் இரக்கமாயிரும்.
இறைவனுடைய புனித மாதாவே, இதோ உம்முடைய சரணமாக ஓடி வந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்குப் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமுடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே, சகல ஆபத்துக்களிலிருந்தும் எங்களை காத்துக்கொள்ளும்.
முதல்வன் - இயேசுக்கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி
துணைவர் - இறைவனின் தூய அன்னையே, எங்களுக்காக மன்றாடும்.
செபிப்போமாக
சுவாமி, முழு மனதோடே தெண்டனாக விழுந்து கிடக்கிற இந்தக் குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னிகையான மரியாயுடைய வேண்டுதலினாலே, சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இவற்றையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்கும் தந்கருளும்.
ஆமென்.
கடைசி வேண்டுதல்
இடைவிடாமல் துதிக்கப்பட யோக்கியமுமாய் மிகுந்த மதுரமுள்ள பூசிதமுமாயிருக்கிற பரம திவ்விய நற்கருணைக்கே எல்லா காலமும் முடிவில்லாத ஆராதனையும் துதியும் தோத்திரமும் உண்டாகக்கடவது.
ஜென்மப்பாவமில்லாமல் உற்பவித்து எப்போதும் பரிசுத்த கன்னியுமாயிருக்கிற நமது ஆண்டவளுமாய்க் கொண்டாடப்பட்டவளுமாயிருக்கிற புனித தேவமாதாவினுடைய அமலோற்பவத்துக்கும் புனித சூசையப்பருடைய பாக்கியமான மரணத்துக்குமே தோத்திரமுண்டாகக்கடவது.
தேவ வரப்பிரசாதத்தின் தாயே, இரக்கத்துக்கு மாதாவே, புனித மரியாயே, எங்கள் மாற்றானுடைய சோதனையிலேயும், மரண நேரத்திலேயும், உமது திருக்குமாரனை வேண்டி எங்களைக் காக்கவும், ஆளவும், கைக்கொண்டு நடத்தவும் வேணுமென்று உமது திருப்பாதம் முத்திசெய்து உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.
Short form of Evening Prayer ... சுருக்கமான மாலை வழிபாடுஎன் இறைவா, உம்மை நான் வணங்கித் தொழுகிறேன். என் முழு மனதோடு உம்மை அன்பு செய்கிறேன். என்னைப் படைத்துக் கிறிஸ்துவனாக்கிக் இந்நாளில் என்னைக் காப்பாற்றியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இந்நாளின் என் செயல்களையெல்லாம் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.இந்த இரவில் என்னைப் பாவத்திலிருந்தும், ஒவ்வொரு தீமையிலிருந்தும் காப்பீராக.
ஆமென்.
என்றும் கன்னியான அன்புத் தாயே, என் ஆன்மாவைக் காப்பாற்ற எனக்கு உதவி செய்தருளும்.
மங்கள வார்த்தை செபம் (3 முறை)
இயேசு, மரி, சூசை - என் இதயத்தையும் என் ஆன்மாவையும் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.
இயேசு, மரி, சூசை - நான் சாகும் வேளையில் எனக்கு உதவி செய்யுங்கள்.
இயேசு, மரி, சூசை - நான் உங்களோடு சமாதானமாய் உயிர் விட அருள் புரிவீராக.
தூய ஆவியை வேண்டல்பரிசுத்த ஆவியே எழுந்தருள்வீர்.
இறை மக்கள் உள்ளங்களை உம் ஒளியால் நிரப்புவீர்.
அவற்றில் அன்புத் தீயை மூட்டியருள்வீர்.
முதல்வன் - உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடுவீர்.
துணைவர் - அதனால் உலகைப் புதுப்பிப்பீர்.
செபிப்போமாக
இறைவா, உம் மக்களின் உள்ளங்களைத் தூய ஆவியின் ஒளியால் தெளிவுபடுத்தினீரே, அத்தூய ஆவியால் சரியானவற்றை உணரவும், அவருடைய ஆறுதலால் மகிழ்வு பெறவும் அருள் புரிவீராக. இவற்றை எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக மன்றாடுகிறோம்.
ஆமென்.
வேலை, படிப்பு துவங்கும் முன் செபம்
இறைவா, எங்களுடைய செபம், வேலை எல்லாம் எப்பொழுதும் உம்மிடமிருந்து துவங்கவும், துவங்கினவை உம்மாலே முடிவு பெறவும் செய்தருளும். ஆகையால் எங்கள் செயல்களை நீரே விரும்பி, முன்னதாக ஏவியருளும். அவை உமது உதவியால் நடந்து முடிவு பெற எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக மன்றாடுகிறோம்.
ஆமென்.
Short form of Morning Prayer ... சுருக்கமான காலை வழிபாடுஎன் இறைவா, உம்மை நான் வணங்கித் தொழுகிறேன். என் முழு மனதோடு உம்மை அன்பு செய்கிறேன். என்னைப் படைத்துக் கிறிஸ்துவனாக்கிக் கடந்த இரவில் காப்பாற்றியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இந்நாளின் செயல்களையெல்லாம் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். உமது திருவுளத்திற்கு ஏற்றவாறு அடியேன் நடக்க அருள் புரிவீராக. உம் மேன்மைக்காக என்னைப் பாவத்திலிருந்தும் ஒவ்வொரு தீமையிலிருந்தும் காப்பீராக. என்னிடமும் என் அன்புக்குரிய அனைவரிடமும் உம் திருவருள் இருப்பதாக.
ஆமென்.
நம்பிக்கை முயற்சிஎன் சர்வேஸ்வரா சுவாமி, தேவரீர் வாக்கு கொடுத்தபடியினாலே இயேசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின திரு இரத்தப் பலன்களைப் பார்த்து என் பாவங்களை எல்லாம் பொறுத்து எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருளுவீர் என்று முழு மனதோடு நம்பியிருக்கிறேன்.
ஆமென்.
விசுவாச முயற்சிஎன் சர்வேஸ்வரா சுவாமி, திருச்சபை விசுவசித்துக் கற்பிக்கிற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன்.
ஆமென்.
சுருக்கமான உத்தம மனஸ்தாபம்என் சர்வேஸ்வரா சுவாமி, தேவரீர் அளவில்லாத நன்மையும் அன்பும் நிறைந்தவராய் இருப்பதினால் என் பாவங்களால் உமக்குச் செய்த துரோகத்துக்காக உத்தம மனஸ்தாபப்படுகிறேன். இனி உமது வரப்பிரசாதத்தின் உதவியால் இப்பேர்ப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான பிரதிக்கினை செய்கிறேன்.
ஆமென்.
Apostles Creed...விசுவாசப் பிரமாணம்
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேஸ்வரனை விசுவசிக்கிறேன்.
இவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன்.
இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னி மரியிடமிருந்து பிறந்தார்.
போஞ்சுப் பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கஞ்செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேஸ்வரனின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.
பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன்.
பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.
புனிதர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்.
பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன்.
நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன்.
சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்.
Ten Commandments...பத்துக் கட்டளைகள்1. உனக்குக் கர்த்தாவான சர்வேஸ்வரன் நாமே, நம்மைத் தவிர வேறு சர்வேஸ்வரன் உனக்கு இல்லாமல் போவதாக.
2. சர்வேஸ்வரனுடைய திருப்பெயரை வீணாகச் சொல்லாதிருப்பாயாக.
3. சர்வேஸ்வரனுடைய திருநாட்களைப் பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக.
4. பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக.
5. கொலை செய்யாதிருப்பாயாக.
6. மோக பாவம் செய்யாதிருப்பாயாக.
7. களவு செய்யாதிருப்பாயாக.
8. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
9. பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக.
10. பிறர் உடைமையை விரும்பாதிருப்பாயாக.
இந்தப் பத்துக் கட்டளைகளும் இந்த இரண்டு கட்டளைகளில் அடங்கும்
1. எல்லாவற்றுக்கும் மேலாக சர்வேஸ்வரனை நேசிப்பது.
2. தன்னைத்தான் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது.
மூவேளைச் செபம்ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூது உரைத்தார். அவளும் பரிசுத்த ஆவியினால் கருத்தரித்தாள். -- அருள்...
இதோ ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும். -- அருள்...
வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிகொண்டார். -- அருள்...
முதல்வன் - கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும்படியாக
துணைவர் - இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக மன்றாடும்.
செபிப்போமாகஇறைவா தேவ தூதர் அறிவித்தபடியே உம்முடைய திருமகன் இயேசு கிறிஸ்து மனிதனானதை நாங்கள் அறிந்துள்ளோம். அவருடைய பாடுகளினாலேயும் சிலுவையினாலேயும் நாங்கள் அவருடைய உயிர்ப்பின் மேன்மையை அறியும் பொருட்டு எங்கள் உள்ளங்களில் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக மன்றாடுகிறோம்.
ஆமென்.
Glory be to the Father
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.
ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக.
ஆமென்.
Hail Maryஅருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சிஷ்ட மரியே, சர்வேஸ்வரனின் மாதாவே, பாவிகளாகிய எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்.
ஆமென்.
Our father....
பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக
உம்முடைய இராச்சியம் வருக
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக
எங்கள் தினந்தோற உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்
எங்களுக்கு தீமை செய்பவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களை பொறுத்தருளும்
எங்களை சோதனையில் விழ விடாதேயும்
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்
ஆமென்.